மதுபான தகராறில் கொலை; ஆத்திரத்தில் கடத்தல்காரரின் வீட்டில் உடலை தகனம் செய்த ஊர் மக்கள்


மதுபான தகராறில் கொலை; ஆத்திரத்தில் கடத்தல்காரரின் வீட்டில் உடலை தகனம் செய்த ஊர் மக்கள்
x

மதுபானம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சுட்டு கொல்லப்பட்ட நபரின் உடலை மதுபான கடத்தல்காரரின் வீட்டின் பின்புறம் மக்கள் தகனம் செய்துள்ளனர்.


பாட்னா,



பீகாரில் மதுபானம் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட செயல்களுக்கு அரசு தடை விதித்த போதிலும் மதுபானம் சார்ந்த குற்றங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இதில் ஷாப்பூரின் பண்டால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 2 பேருக்கு இடையே நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர், மற்றொருவரிடம் நாட்டு சாராயம் தரும்படி கேட்டுள்ளார். இதில் அவருக்கும், மதுபானம் கடத்தி விற்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு முற்றியது.

இந்த நிலையில், திடீரென மதுபான கடத்தல்காரர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மதுபானம் கேட்டு வந்த நபர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். உயிரிழந்த நபரின் உடலை தூக்கி கொண்டு மதுபான கடத்தல்காரரின் வீட்டுக்கு சென்றனர்.

அவரது வீட்டை உள்ளூர்வாசிகள் அடித்து, நொறுக்கினர். இதன்பின்பு, உயிரிழந்த நபரின் உடலை கடத்தல்காரரின் வீட்டின் பின்புறம் வைத்து, தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்து, போலீசார் கொலை வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story