விவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோலார் தங்கவயல்:
வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
விவசாயி
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா எச்.பையப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவர்த்தன். விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை அதே கிராமத்தை சேர்ந்த சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கோவர்த்தனின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர்.
இதுபற்றி கோவர்த்தன் தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த சரண் மற்றும் வெங்கடஷ் ஆகிய இருவரும் தங்களிடம் இருந்த இரும்பு கம்பியால் கோவர்த்தனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோவர்த்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக முல்பாகல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண் மற்றும் வெங்கடேசை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அதையடுத்து இக்கொலை சம்பவம் குறித்து கோலார் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மேலும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக கோலார் கோர்ட்டில் இந்த கொலை வழக்கின் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று நீதிபதி சுக்ஷாக்ச பாலன் தீர்ப்பு கூறினார்.
ஆயுள் தண்டனை
அவர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் கோவர்த்தனை கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதால் அவர்கள் 2 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் கோவர்த்தன் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீசார் சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பிடித்து சிறையில் அடைத்தனர்.