அரசு வழங்கிய நிலத்தில் பங்கு தராததால் விவசாயி படுகொலை; உறவினர்கள் வெறிச்செயல்?
தாவணகெரே மாவட்டத்தில், அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் பங்கு தராததால் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு:
தாவணகெரே மாவட்டத்தில், அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் பங்கு தராததால் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
விவசாயி
தாவணகெரே மாவட்டம் காந்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சவுடேஸ்வரி நகர் பகுதியில் அமைந்திருக்கும் கித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயிலார்(வயது 28). விவசாயியான இவர் தனக்கு விவசாயம் செய்வதற்காக அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தார். அதன்பேரில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு சார்பில் 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலம் அரசு சார்பில் இவருக்கு இலவசமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த இவரது உறவினர்கள் சிலர் தங்களுக்கும் அந்த நிலத்தில் பங்கு தர வேண்டும் என்று கோரி மயிலாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்கேஸ்வரா கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின்போதும் மயிலாரிடம், அவரது உறவினர்கள் நிலத்தை பங்கிட்டு தரக்கோரி தகராறில் ஈடுபட்டனர்.
தப்பி ஓட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலார் கிராமத்தையொட்டிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மயிலாரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த மயிலார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுபற்றி மயிலாரின் உறவினர்கள், காந்திநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயிலாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மயிலாரின் உறவினர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.