திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இளம்பெண் படுகொலை
பெங்களூருவில் திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட அந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ராமமூர்த்திநகர்:
பெங்களூருவில் திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட அந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நேபாள நாட்டு இளம்பெண்
பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.சி.பாளையா அருகே முனேஷ்வராநகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமாரி(வயது 23). இவர், உரமாவு பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். கிருஷ்ணகுமாரி நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார். அவருக்கும், பெங்களூருவில் வசித்து வந்த நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் தாபேவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
பின்னர் முனேஷ்வராநகரில் சந்தோசும், கிருஷ்ணகுமாரியும் வாடகை வீட்டில் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சந்தோசும் சலூன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்த சந்தோசுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சந்தோஷ் கிருஷ்ணகுமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
கழுத்தை நெரித்து கொலை
மேலும் கிருஷ்ணகுமாரியின் கழுத்தை சந்தோஷ் நெரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயக்கம் அடைந்தார். காதலி இறந்து விட்டதாக நினைத்து சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில், உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரி நடந்த சம்பவம் பற்றியும், தன்னை காப்பாற்றும்படியும் நண்பரை செல்போனில் அழைத்து தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கிருஷ்ணகுமாரியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணகுமாரி பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுபற்றி ராமமூர்த்திநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்த சந்தோசுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் இடையே சாதாரண பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சந்தோசை வலைவீசி தேடிவருகிறார்கள்.