மும்பையில் கனமழை: ரெயில் சேவை பாதிப்பு


மும்பையில் கனமழை: ரெயில் சேவை பாதிப்பு
x

Photo Credit: PTI (File)

மும்பையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தான் மழைக்காலம் தொடங்கும்.இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே மழைக்காலம் தொடங்கியது. எனினும் மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இதன் காரணமாக மும்பை, தானே நகர்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. இதனால் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க நகர் பகுதிகளில் குடிநீர் வினியோக அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஏரிகளில் குறைந்துவந்த நீர்மட்டம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் மக்களை மகிழ்விக்கும் வகையில் மும்பை, தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட் ஆகிய உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

வெளுத்து வாங்கிய மழையால் மும்பையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story