கனடா பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. போஸ்டர்களை அகற்றிய பாஜக: மும்பையில் பரபரப்பு


கனடா பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. போஸ்டர்களை அகற்றிய பாஜக: மும்பையில் பரபரப்பு
x

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரியான காலிஸ்தானிகளுக்கு இங்கு இடமில்லை என யுவ மோர்ச்சா தலைவர் தஜிந்தர் சங் திவானா கூறினார்.

மும்பை,

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, தூதரக அதிகாரிகளை மிரட்டுவது என அவர்களின் அடாவடி தொடர்கிறது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் கனடாவைச் சேர்ந்த பாடகர் ஷுப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கான போஸ்டர்களை பாஜகவின் இளைஞரணியினர் (பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா) அகற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

பாடகர் ஷுப் காலிஸ்தான் ஆதரவாளர் என்பதால் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுபற்றி யுவ மோர்ச்சா தலைவர் தஜிந்தர் சங் திவானா கூறுகையில், "இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரியான காலிஸ்தானிகளுக்கு இங்கு இடமில்லை. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் புண்ணிய பூமியில் கனடா பாடகர் ஷுப்பை இசை நிகழ்ச்சி நடத்த விடமாட்டோம். நிகழ்ச்சியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவிப்போம்." என்றார்.


Next Story