உ.பி.யின் காஜிபூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம்
பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த முக்தார் அன்சாரி, மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், மௌ சதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர்.
இவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.யின் வெவ்வேறு நீதிமன்றங்களால் செப்டம்பர் 2022 முதல் எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த முக்தார் அன்சாரி, மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து, முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி, தனது தந்தைக்கு சிறையில் 'விஷம்' கொடுத்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோர்ட்டை நாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில், அவர் திடீரென உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
ஆனால், விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால், முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அன்சாரியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தேவைப்பட்டால் அவரது உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நேற்று நள்ளிரவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், காஜிபூரில் உள்ள காளி பாக் மயானத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் உமர் அன்சாரி, சகோதரர் அப்சல் அன்சாரி உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமையில் மயானத்துக்கு உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.