சுற்றுலா சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 14 சொகுசு கார்கள்! பயணிகளின் திக்...திக் நிமிடங்கள்!


சுற்றுலா சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 14 சொகுசு கார்கள்! பயணிகளின் திக்...திக் நிமிடங்கள்!
x

இதுவரை 10 கார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கார்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் கார்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில், கன மழையால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் 14 கார்களில் பயணித்து உள்ளனர். இந்நிலையில் அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டன. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

அவர்கள் சுற்றுலா சென்ற கத்கூத் வனப்பகுதியில் உள்ள சுக்தி ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

உடனே தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர், பொதுமக்கள் உதவியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மலைப்பாங்கான இடத்திற்கு சென்று விட்டு கார்களில் கீழே இறங்கும் போது அங்குள்ள ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உடனே அவர்கள் அனைவரும் கார்களை விட்டு இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர்.

ஆனால் கார்கள் இருந்த பாதையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி கார்களை அடித்துச் செல்லப்பட்டன. இதில் பல விலை உயர்ந்த கார்களும் அடங்கும். அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாரும் காரில் இல்லை.

இதுவரை 10 கார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கார்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



Next Story