மராட்டியத்துக்கு நல்ல திட்டங்கள் தேவை - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டு நல்ல திட்டங்களை மராட்டியத்திற்கு கொண்டுவாருங்கள் என உத்தவ் தாக்கரே கூறினார்.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
ரத்னகிரி மாவட்டம் நானாரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்போது கூட்டணியில் இருந்த சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நானாரில் அமைய இருந்த மெகா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை, தற்போது அதே ரத்னகிரி மாவட்டம் பார்சு பகுதியில் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தால் தங்கள் பகுதியில் பல்லுயிர்தன்மை பாதிக்கப்படுவதுடன், தங்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிக்கப்படுவதாக கூறி கடந்த மாதம் முதல் அவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மேலும் பெண்கள் உள்பட பலரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
உத்தவ் தாக்கரே வருகை
உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே போராட்டம் நடைபெற்று வரும் பார்சு பகுதிக்கு நேற்று சென்றார். அதேவேளையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான நிலேஷ் ரானே பேரணி நடத்தினர். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி வகித்த போது, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க பார்சு பகுதியை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும், தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் அதை அவர் எதிர்ப்பதாகவும் நிலேஷ் ரானே கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வருவதையொட்டியும், பா.ஜனதாவினரின் ஆதரவு போராட்டத்தையொட்டியும் பார்சு பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். ரத்னகிரி மாவட்ட போலீசார் மட்டுமின்றி சிந்துதுர்க், சாங்கிலி, சதாரா, கோலாப்பூர், புனே மற்றும் தானே பகுதிகளில் இருந்து கூடுதல் போலீசார் மற்றும் ரிசர்வ் படை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
144 தடை உத்தரவு
அதுமட்டும் இன்றி பதற்றமான சூழல் நிலவியதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வரும் பார்சு கிராம மக்களை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குஜராத்துக்கு மாற்றுங்கள்...
பார்சு பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நான், இடத்தை தேர்வு செய்தது உண்மை தான். அதற்காக எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களின் மண்டையை உடைக்க நான் கூறவில்லை. அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பும் அங்குள்ள மக்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது சம்ருத்தி நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இதேபோன்று எதிர்ப்பு எழுந்தது. ஆனால் நாங்கள் எதிர்ப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். வளர்ச்சி இடையூறு இல்லாமல் ஒரு வழியை உருவாக்கினோம்.
வேதாந்தா- பாக்ஸ்கான் மற்றும் டாடா- ஏர்பஸ் போன்ற திட்டங்கள் நம்மை விட்டு போய்விட்டன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை போன்ற திட்டங்களை மராட்டியத்தில் இருந்து குஜராத்துக்கு மாற்றிவிட்டு மராட்டியத்திற்கு நல்ல திட்டங்கள் வர வேண்டும்.
ஆனால் பிரச்சினைக்கு உட்படாத திட்டங்கள் குஜராத்துக்கு செல்கிறது. சர்ச்சைக்குரியது கொங்கன் மற்றும் மராட்டியம் மீது திணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அனுமதி மறுப்பு
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பார்சு பகுதியில் பொதுகூட்டம் நடத்த திட்டமிட்ட இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பார்சுவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதில் 2 ஆயிரத்து 900 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க அந்த பகுதி மக்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்து இருப்பதாகவும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்த் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.