டெல்லி, மும்பை விமான நிலையங்களில் அதிக ஊழியர்கள் நியமனம்: நெரிசலை குறைக்க நடவடிக்கை


டெல்லி, மும்பை விமான நிலையங்களில் அதிக ஊழியர்கள் நியமனம்: நெரிசலை குறைக்க நடவடிக்கை
x

நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி, மும்பை சர்வதேச விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனை கவுன்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

புதுடெல்லி,

மத்திய தொழிலக பாதுகாப்பு படை, நாட்டில் 65 விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளது. பயணிகளை பரிசோதித்தல், விமான கடத்தல் முயற்சி நடக்காதவாறு தடுத்தல் உள்ளிட்ட பணிகளை இந்த படை செய்து வருகிறது.

இதற்கிடையே, டெல்லி, மும்பை போன்ற பெரிய சர்வதேச விமான நிலையங்களில் கடந்த 2 வாரங்களாக நெரிசல் அதிகரித்து வருகிறது. பயணிகள் பரிசோதனை பகுதியில் நீண்ட வரிசை காணப்படுகிறது. அக்காட்சியை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அவற்றை பார்த்த அதிகாரிகள், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விமான நிறுவனங்களையும், விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி, மும்பை சர்வதேச விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனை கவுன்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன. அங்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக தலா 100 ஊழியர்களை நியமிக்கப் போவதாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அப்படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதல்கட்டமாக, டெல்லி, மும்பை சர்வதேச விமான நிலையங்களில் திறக்கப்பட உள்ள கூடுதல் கவுன்ட்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க உள்ளோம்.

இதுபோல், பயணிகள் வருகை நிறைந்த இதர பெரிய விமான நிலையங்களிலும் கூடுதல் ஊழியர்களை நியமிப்போம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடியும்வரை இந்த நடவடிக்ைக தொடரும். இதற்காக வழக்கமான பரிசோதனையிலோ, பாதுகாப்பு நடவடிக்கைகளிலோ எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story