"முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும்" - வெங்கையா நாயுடு உறுதி
முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று மாநிலங்களவை அவைத்தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை அவைத்தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி முரளீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது மாநிலங்களவை அவைத்தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். நாடாளுமன்றத்தில் பணி செய்யும் அனைத்து உறுப்பினர்களும் முறையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அதைபோல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இவை மட்டும் அல்லாமல் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கக்கூடிய வகையில் அலுவல் நேரங்களில் உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகங்கள் முழுவதும் ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவிற்கு பிறகு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.