நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதில், 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மணிப்பூர் கலவர பிரச்சினையை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. விலைவாசி விவகாரம், விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளன.
அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு இன்று (புதன்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் நடக்கும் சம்பிரதாயமான கூட்டம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த காலங்களில், மூத்த மத்திய மந்திரிகள் நடத்திய அனைத்து கட்சி கூட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளன. பிரதமர் மோடியும் இத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
சுமுகமாக நடத்த அழைப்பு
இன்றைய கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் என்று தெரிகிறது.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், தனியாக நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவிலும், பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் டெல்லியிலும் ஆலோசனை நடத்தி வந்ததால், கூட்டத்துக்கு யாரும் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, அக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.