மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்திய கிராம மக்கள்


மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்திய கிராம மக்கள்
x

மண்டியா அருகே மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்தினர். மேலும் அந்த குரங்குக்கு 11-வது நாள் திதி கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

மண்டியா:

மண்டியா அருகே மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்தினர். மேலும் அந்த குரங்குக்கு 11-வது நாள் திதி கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

விலங்குகள் மீதான பிரியம்

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விலங்குகள் மீதான பிரியம் என்பது அலாதியானது தான். சாதுவான விலங்குகளான நாய், பூனை மட்டுமின்றி ஒரு சிலருக்கு யானை, சிங்கம், சிறுத்தைகள் மீதும் கரிசணம் உண்டு. அதுபோல் பலரும் குரங்கை ஆஞ்சநேயராக கருதி தின்பண்டங்கள், உணவு பொருட்கள் வழங்குவதையும் கேள்வி பட்டிருப்போம்.

அந்த வரிசையில் தாங்கள் உயிருக்கு உயிராக வளர்க்கும் நாய், ஆடு, மாடுகள் உயிரிழந்தாலோ, தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு, பாம்பு இறந்தால் அதற்கு இறுதிச்சடங்குகள் நடத்தும் பழக்கவழக்கமும் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

மின்சாரம் தாக்கி குரங்கு செத்தது

இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்குக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

மண்டியா மாவட்டம் சுமஹள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் உலா வந்து செல்வது வழக்கம். அதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குரங்கு சுமஹள்ளி கிராமத்திற்கு வந்துள்ளது. அதற்கு கிராம மக்கள் பழம், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களையும், உணவு பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

இதனால் அந்த குரங்கு, அப்பகுதி மக்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த குரங்கு ஒரு மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு மின்கம்பியை பிடித்து தனக்கே உரிய சேட்டையை செய்தபடி இருந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி குரங்கு உயிரிழந்தது.

இறுதிச்சடங்கு

இதை பார்த்த அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த சிலர், தங்களுடன் பல நாட்களாக நட்புபாராட்டி வந்த குரங்கு இறந்துவிட்டதே என்ற வேதனையில், அதற்கு இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் இறந்துபோன குரங்கின் உடலை பாடையில் வைத்து பூக்களால் அலங்கரித்தனர். பின்னர் குரங்கின் உடலை பாடையில் வைத்து 4 பேர் சுமந்தனர். பறை ஒலிக்க இறுதி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் குரங்கின் உடலை குழி தோண்டி கிராம மக்கள் அடக்கம் செய்தனர். இந்த இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் கிராம தலைவர் சச்சின் தலைமையில் நடைபெற்றது.

11-வது நாள் திதி

தற்ேபாது செத்துப்போன குரங்கிற்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் செத்துப்போன குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்தியதோடு மட்டுமல்லாமல் 11-வது நாள் திதி கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருவதாக சச்சின் தெரிவித்தார்.


Next Story