மடாதிபதி முருகா சரணரு மீது 694 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்


மடாதிபதி முருகா சரணரு மீது 694 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
x

பாலியல் பலாத்கார வழக்கில் மடாதிபதி முருகா சரணருவுக்கு எதிராக சித்ரதுர்கா கோர்ட்டில் 694 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் மயக்க மருந்து கலந்த ஆப்பிளை கொடுத்து 10 சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்ரதுர்கா:

பாலியல் பலாத்கார வழக்கில் மடாதிபதி முருகா சரணருவுக்கு எதிராக சித்ரதுர்கா கோர்ட்டில் 694 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் மயக்க மருந்து கலந்த ஆப்பிளை கொடுத்து 10 சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பலாத்கார வழக்கு

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி. இவர் மடத்தின் பள்ளியில் படித்து வந்த 2 மாணவிகளை பலாத்காரம் செய்ததாக சித்ரதுர்கா புறநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மடாதிபதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி போலீசார் மடாதிபதியை கைது செய்தனர். இதையடுத்து வார்டன் ரஸ்மி, மடத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்கள், வக்கீல் ஆகியோரை கைது செய்தனர். அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில் கடந்த மாதம் மேலும் சில மாணவிகள் மடாதிபதி மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் மடத்திற்கு சென்று சோதனை செய்ததுடன், கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தையும், பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த வாக்குமூலம், சாட்சிகள் அளித்த தகவலின்படி குற்றப்பத்திரிக்கை தயார் செய்தனர். நேற்று இந்த குற்றப்பத்திரிக்கை சித்ரதுர்காவில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் தாக்கல் செய்தார். அதாவது 2 தொகுப்புகளாக தலா 347 பக்கம் வீதம் மொத்தம் 694 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

10 சிறுமிகள்

இந்த குற்றப்பத்திரிகையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறுமிகளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆப்பிளை கொடுத்து பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்காக விடுதி வார்டன் ரஸ்மி, மடத்தின் செயலாளர் பரமசிவமூர்த்தி, மேலும் ஒரு ஊழியரை பயன்படுத்தியிருக்கிறார். இதுவரை 10 சிறுமிகளை மடாதிபதி பலாத்காரம் செய்திருப்பதாகவும், அனைவரையும் மடத்தின் அலுவலகம், படுக்கையறை, கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு அடிபணியாத சிறுமிகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டி சீரழித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் பெண் வார்டன், மடத்தின் ஊழியர்கள் 2 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. ஆனால் வக்கீல் காந்தராஜ் பெயர் இடம் பெறவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story