மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து சக மாணவர்களுக்கு அனுப்பிய கொடுமை
கல்லூரியில் உள்ள கழிவறையில் செல்போன் மூலம் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து சக மாணவர்களுக்கு அந்த வீடியோக்களை அனுப்பிய 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
மங்களூரு:
கல்லூரியில் உள்ள கழிவறையில் செல்போன் மூலம் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து சக மாணவர்களுக்கு அந்த வீடியோக்களை அனுப்பிய 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
மாணவிகளின் ஆபாச காட்சிகள்
உடுப்பி டவுன் அம்பலப்பாடி பைபாஸ் சாலையில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதிலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் படித்து வந்த மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் வெளியாகி வந்தன. இதனால் கொதித்தெழுந்த மாணவிகள் இதுபற்றி விசாரித்தனர். அப்போது அவர்களது சக மாணவிகளான இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள், பாதிக்கப்பட்ட மாணவிகள் கழிவறைக்கு செல்லும்போது அந்த காட்சிகளை ரகசியமாக தங்களது செல்போன்களில் படம் பிடித்து, அந்த வீடியோக்களை தாங்கள் சார்ந்த சமூகம் அடங்கிய மாணவர்களின் வாட்ஸ்-அப் குழுவிற்கும், சக மாணவர்களின் செல்போன்களுக்கும் அனுப்பி வந்தது தெரியவந்தது.
மணிப்பூர் சம்பவம்
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும், மற்ற மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குறிப்பிட்ட அந்த 3 மாணவிகளிடமும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த 3 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் அந்த மாணவிகள் தங்களது சக மாணவர்களுக்கு அனுப்பிய பல மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்கள், இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை போன்று இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.