பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி வருகிற 13-ந் தேதி தொடங்கி வைக்கிறார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி வருகிற 13-ந் தேதி தொடங்கி வைக்கிறார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
சர்வதேச விமான கண்காட்சி
மத்திய அரசின் ராணுவத்துறை சார்பில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்த கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் 14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலபுரகியில் இருந்தபடி காணொலியில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக அரங்கு
14-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் நான் காணொலி மூலம் கலந்து கொண்டேன். இந்த முறை விமான கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது. கண்காட்சியில் இந்திய அரங்கு, கர்நாடக அரங்கு மற்றும் விமான உற்பத்தி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற உள்ளன. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த கண்காட்சியில் மொத்தம் 731 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 633 இந்திய நிறுவனங்கள் மற்றும் 98 வெளிநாட்டு நிறுவனங்கள் அடங்கும்.