உத்தரகாண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டேராடூன் வந்தார். மாநாடு நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபோது, வழிநெடுக பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மாநாடு நடைபெறும் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி "21ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் (2021-2030) உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் சொந்தமானது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்களிடம் நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் இணைக்கிறது. தெய்வீக பூமியான உத்தரகாண்ட் நிச்சயம் உங்களுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதற்கு உத்தரகாண்ட் சிறந்த எடுத்துக்காட்டு" என்றார்.
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.