பெண்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சி; காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பெண்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (ஓ.பி.சி.) ஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரசின் இந்த கோரிக்கையை சாடிய பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது அந்த கட்சி வெறுப்பை மட்டுமே கொண்டுள்ளதாக கூறினார்.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் சத்தீஷ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா யாத்திரை ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
பிரிவினை
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் (மோடி) பிரதமரானதால், காங்கிரஸ் கட்சி என்னை மிகவும் வெறுக்கிறது. மோடியின் பெயரால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் தவறாக பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தயங்கவில்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால் தாய்மார்களும், சகோதரிகளும் என்னை ஆசீர்வதிக்கிறார்கள். இந்த அச்சத்தால் அவர்கள் (காங்கிரஸ்) புதிய விளையாட்டை தொடங்கி உள்ளனர்.
நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களின் ஆட்டம் முடிந்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே நமது சகோதரிகளுக்குள் பிரிவினையை விதைக்க விரும்புகிறார்கள். சாதியின் பெயரால் பெண்களை பிரிப்பது போன்ற பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
பெண்களுக்கு அதிகாரம்
இந்த சட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சத்தீஷ்கார் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். எனவே எதிர்க்கட்சிகளின் பொய்களில் வீழ்ந்து விடாமல் ஒற்றுமையாக இருங்கள். உங்களது ஆசீர்வாதங்களை எனக்காக வைத்திருங்கள். உங்கள் கனவுகள் அனைத்தையும் மோடி நிறைவேற்றுவார். பெண்களிடையே உள்ள ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு காரணமாகவே காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்தன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
500 ஒன்றியங்கள்
முன்னதாக டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் மத்திய அரசின் சங்கல்ப் சப்தா திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 500 ஒன்றியங்களில் வருகிற 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டத்தின் வெற்றியை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.