கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றி
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றியை ருசித்தன. மேலும் இரு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது.
பெங்களூரு
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றியை ருசித்தன. மேலும் இரு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது.
82 சதவீத வாக்குகள்
75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 4 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடந்தது. அதாவது வடமேற்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக தெற்கு பட்டதாரி, கர்நாடக வடமேற்கு ஆசிரியர், கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மேல்-சபை முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 பேர் போட்டியில் இருந்தனர். பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, மைசூரு, மண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், உத்தரகன்னடா, தார்வார், ஹாவேரி, கதக் ஆகிய 11 மாவட்டங்களில் எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இதில் பட்டதாரி தொகுதிகளில் 65 சதவீதமும், ஆசிரியர் தொகுதிகளில் 82 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.அதன் பிறகு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டிகள் மைசூரு மற்றும் பெலகாவியில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது.
கர்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி வாக்கு பெட்டிகள் மைசூருவில் உள்ள மகாராணி மகளிர் வணிகவியல் கல்லூரியிலும், மற்ற மூன்று தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் பெலகாவியில் உள்ள ஜோதி பி.யூ.கல்லூரியிலும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வாக்கு எண்ணிக்கை
இந்த நிலையில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் வாக்குச்சீட்டுகளை ஒரு மேசையில் கொட்டி செல்லாத ஓட்டுகளை பிரித்து எடுத்தனர். பிறகு கட்சி வாரியாக வேட்பாளர்களுக்கு விழுந்த ஓட்டுகளை பிரித்து கட்டுகளாக கட்டி எண்ணத்தொடங்கினர்.
இந்த பணிகள் பகல் 12 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை நிலவரம் மதியம் 3 மணிக்கு மேல் தெரிய வந்தது.
பசவராஜ் ஹொரட்டி வெற்றி
இறுதியில் கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் ஹொரட்டி 9 ஆயிரத்து 266 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 4 ஆயிரத்து 669 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பசவராஜ் குரிகாரை தோற்கடித்தார். 1,223 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
பசவராஜ் ஹொரட்டி கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பசவராஜ் ஹொரட்டி தொடர்ச்சியாக 8-வது முறையாக அவர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். கர்நாடக வடமேற்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் ஹுக்கேரி 11 ஆயிரத்து 460 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
பிரகாஷ் ஹுக்கேரி
ஓட்டு வித்தியாசம் 5 ஆயிரத்து 55 ஆகும். பா.ஜனதா வேட்பாளர் அருண் சகாப்பூர், 6 ஆயிரத்து 405 வாக்குகள் பெற்றார். 1,270 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. பிரகாஷ் ஹுக்கேரி சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.