ஜார்க்கண்ட்: புதிய முதல்-மந்திரி சம்பாய் சோரன் பதவியேற்றபின் ஐதராபாத் செல்லத்தயாரான எம்.எல்.ஏ.க்கள்


ஜார்க்கண்ட்: புதிய முதல்-மந்திரி சம்பாய் சோரன் பதவியேற்றபின் ஐதராபாத் செல்லத்தயாரான எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 2 Feb 2024 3:37 PM IST (Updated: 2 Feb 2024 4:04 PM IST)
t-max-icont-min-icon

ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை செய்யலாம் என்பதால், அவர்களை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

ராஞ்சி:

சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறையின் பிடி இறுகியதால், கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை செய்யலாம் என்பதால், அவர்களை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று ஜே.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் புறப்படவில்லை.

இந்நிலையில் சம்பாய் சோரன் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்றார். அதன்பின்னர் ஆளும் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத் செல்வதற்காக ராஞ்சி விமான நிலையத்தை அடைந்தனர்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், "பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பா.ஜ.க, எங்கள் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம் என்பதால் இந்த காலகட்டத்தில் நாங்கள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்த முடியாது" என்றார்.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் 43 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Next Story