சட்டப்பேரவை தேர்தல்: சத்தீஷ்கரில் 70.87 % வாக்குகள் பதிவு
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும்.
முதல் கட்ட தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. மோஹ்லா-மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், கொங்கர், கேஷ்கல், கொண்டகான், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர், கோண்டா ஆகிய 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல் மந்திரியாக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறு விறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.