உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் - மத்திய மந்திரி நித்யானந்த் ராய்


உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் - மத்திய மந்திரி நித்யானந்த் ராய்
x

உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று மத்திய மந்திரி நித்யானந்த் ராய் கூறினார்.

பாதுகாப்பாக உள்ளனர்

ராஷ்டிரீய ஜனதாதள பொதுச்செயலாளர் அப்துல் பாரி சித்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''இந்தியாவில் நிலவும் சூழ்நிலை சரியில்லாததால், என் குழந்தைகள் வெளிநாட்டில் குடியேறுவதை நான் விரும்புகிறேன்'' என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று பாட்னாவில் பேட்டி அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:-

சித்திக் சொல்லும் மதம் உள்பட அனைத்து சிறுபான்மை மதத்தினரும் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளனர். உலகின் மற்ற நாடுகளை விட அவர்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர். மத்திய உள்துறை இணை மந்திரி என்ற பொறுப்புணர்வுடன் இதை சொல்கிறேன்.

சமாதான அரசியல்

ராஷ்டிரீய ஜனதாதளமும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் தேர்தல் ஆதாயத்துக்காக ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அனுதாபத்தை பெறுவதற்காக 'சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்' என்று செய்தி பரப்பி வருகின்றன.

இதை சமாதான அரசியல் என்று சொல்லலாம். இந்த அரசியல்தான், நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. மகாத்மா காந்தி இதை பின்பற்றவில்லை. ஆனால், பிரிவினைக்கு பிறகு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஆண்டவர்கள் அதிகார வேட்கையில் இந்த அரசியலை பின்பற்றினர்.

போருக்கு துணிச்சல் இல்லை

ராகுல்காந்தி, ஆயுதப்படைகளின் மனஉறுதியை குலைக்கும்வகையில் பேசி வருகிறார். சீனாவும், பாகிஸ்தானும் இது 1960-களில் இருந்த இந்தியா அல்ல என்பதை உணர்ந்து கொண்டன.

பிரதமர் மோடி ஆட்சியில், இந்தியாவுடன் போருக்கு வர எந்த சக்திக்கும் துணிச்சல் இல்லை. அப்படி போர் வந்தாலும், இந்தியாதான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story