ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கல்வித்துறை மந்திரியுடன் பேசி நியாயம் கிடைக்க நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கல்வித்துறை மந்திரியுடன் பேசி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
பாகல்கோட்டை:
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கல்வித்துறை மந்திரியுடன் பேசி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
பாகல்கோட்டையில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நியாயம் கிடைக்க நடவடிக்கை
பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர் தற்கொலை முடிவை எடுத்திருப்பது பற்றி அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் எனது துறைக்கு சம்பந்தப்பட்டது இல்லை.
ஆனாலும் இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை மந்திரியுடனும், துறை அதிகாரிகளுடனும் பேசுகிறேன். அவர்களுடன் பேசி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதா கட்சி எப்போதும் மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்ததில்லை. எங்கள் கட்சி என்றும் நாளை செய்யலாம் என்று ஒரு போதும் சொல்லியது இல்லை.
மக்களை ஏமாற்றும் செயல்
கர்நாடகத்திலும் சரி, நாட்டிலும் சரி 50 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது எந்த திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. தற்போது மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்கும்படி காங்கிரசார் பிரசாரம் செய்வது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், விவசாயிகள், டிரைவர்களின் பிள்ளை களுக்கு கல்வித்திட்டங்களை கொணடு வந்துள்ளார். காங்கிரசை போன்று செய்வோம் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். செய்து விட்டு தான் சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.