2025-ம் ஆண்டிற்குள் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்
பெங்களூருவில் 2025-ம் ஆண்டிற்குள் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், போக்குவரத்து நேரத்தை குறைக்கும் எண்ணத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது முதற்கட்ட மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் விரிவாக்க பணிகளும் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 2025-ம் ஆண்டிற்குள் பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை 175 கிலோ மீட்டரை தாண்டும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறி உள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் அவர் பேசுகையில், 'மெட்ரோ ரெயில்களுக்கான 2 மற்றும் 3-ம் கட்ட பணிகள் தொடங்கி நிறைவடையும் நிலையில் உள்ளன. பெங்களூருவில் அடுத்த 2025-ம் ஆண்டிற்குள் 175 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு விடும். மேலும், 2041-ம் ஆண்டிற்குள் நகரில் 314 கிலோ மீட்டர் தூர மெட்ரோ சேவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும். தற்போது விமான நிலையத்தையும், பெங்களூரு நகரையும் இணைக்கும் மெட்ரோ பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது' என்றார்.