மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்
மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த அஜித் மோகன், ஸ்னாபல் நிறுவனத்திற்கு சென்று விட்டதால், தற்போது அந்த பதவிக்கு சந்தியாவை நியமித்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய தலைவராக சந்தியாவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என மெட்டாவின் தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாயை பெருக்குவதற்கான பணிகளில் சந்தியா கவனம் செலுத்துவார் என்றும், 2023ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று புதிய பதவிக்கு மாறுவார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மெட்டாவில் இணைந்த சந்தியா. சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் நாடுகளின் மெட்டா நிறுவனத்தின் வணிக பிரிவுகளை கவனித்து கொண்டார். தென்கிழக்கு ஆசியாவில் மெட்டாவின் இ-காமர்ஸ் முயற்சிகளையும் உருவாக்க உதவினார்.
முன்னதாக, வாட்ஸ்அப்பின் இந்திய தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்பார்ம்ஸ் பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தங்கள் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து, வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு 'பொது கொள்கை இயக்குனராக' தற்போது பணியாற்றி வரும் சிவநாத் துக்ரா, இனிமேல் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் 'பொது கொள்கை இயக்குனர்' ஆக செயல்படுவார் என மெட்டா நிறுவனம் அறிவித்தது.