மீரட்டில் டயர் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் 2 பேர் பலி
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை தொழிற்சாலையில் இருந்த மற்ற ஊழியர்கள் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் இன்சோலி பகுதியில் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பயன்படுத்திய டயர்களை மறுசுழற்சி செய்து அவற்றிலிருந்து எண்ணெய் மற்றும் கம்பிகளை எடுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
இன்று அதிகாலை எப்போதும்போல டயர் தொழிற்சாலையில் வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு இருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மற்ற ஊழியர்கள் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாய்லர் அதிக அழுத்தம் காரணமாக வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.