உ.பி.: அரசின் திருமண திட்டத்தில் மிகப்பெரிய மோசடி - மணமக்களைபோல் உடையணிந்து மோசடியில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள்


உ.பி.: அரசின் திருமண திட்டத்தில் மிகப்பெரிய மோசடி - மணமக்களைபோல் உடையணிந்து மோசடியில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள்
x

உத்தரபிரதேசத்தில் வெகுஜன திருமணத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவு நாடாளுமன்ற தேர்தலுக்கும் வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த 'முதல்-மந்திரியின் வெகுஜன திருமணத் திட்டம்'.

இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு உ.பி முழுவதும் பரவலாக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தநிலையில் இந்த திட்டத்தை பயன்படுத்தி திருமண மோசடியில் ஈடுபட்டதாக 2 அரசு அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெகுஜன திருமண நிகழ்வில் மணப்பெண்கள் மாலை அணிவிப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. மாப்பிள்ளை போல் உடையணிந்த சில ஆண்களும் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகின.

இந்த சம்பவம் பாலியா மாவட்டத்தில் ஜனவரி 25-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணமகள் மற்றும் மணமகன்கள்போல் வேடம் அணிந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணமகள் மற்றும் மணமகன்களாக வேடமிடுவதற்கு ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ரூ.500 முதல் ரூ.2,000 வரை லஞ்சமாக வழங்கப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

19 வயது இளைஞரான ராஜ் குமார் என்டிடிவியிடம் அளித்த பேட்டியில், தனக்கு மணமகனாக நடிக்க பணம் கொடுக்கப்பட்டதாக கூறினார். திருமணத்தைப் பார்க்க நான் அங்கு சென்றேன். என்னை அங்கே உட்கார வைத்துவிட்டார்கள் என்றார்.

வெகுஜன திருமண விழாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேத்கி சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகள், 2 நாட்களுக்கு முன்னர்தான் என்னிடம் தெரிவித்தனர். இதில் ஏதோ குளறுபடிகள் இருப்பதாக அறிந்துக்கொண்டேன். தற்போதுதான் இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


Next Story