நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்- டெல்லியில் தலைவர்கள் கைது


நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்- டெல்லியில் தலைவர்கள் கைது
x

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸ் கைது செய்தனர்!

புதுடெல்லி:

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். சோனியாகாந்தியுடன், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார்.

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார். காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை குறித்து ஏற்கனவே ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story