கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சிகிச்சை மையங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரம்
மும்பையில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கொரோனா மையத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் நேற்று 3-வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,357 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் மும்பையிலும் தொடர்ந்து நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று 889 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் பலியானார். நகரில் இதுவரை 10 லட்சத்து 68 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,396 நாட்களாக உள்ளது.
கொரோனா அதிகரிப்பு காரணமாக கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மராட்டிய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல ரெயில், பஸ், தியேட்டர், அரங்கம், அலுவலகம், ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளிகள் போன்ற பகுதிகளில் பொது மக்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.
தொற்று பாதிப்பு உயர்வால் , ஏற்கனவே அமைக்கப் பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கொரோனா மையத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.