மது போதையில் தூங்கிய தொழிலாளி மர்மசாவு
தரிகெரேயில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போதையில் தூங்கிய தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை மதுக்கடை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு:-
தொழிலாளி சாவு
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கெரேகுச்சே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அந்தப்பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானம் வாங்கி குடித்துவிட்டு மஞ்சுநாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் மஞ்சுநாத் தூங்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் எழும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், மஞ்சுநாத்தை எழுப்பி உள்ளனர். அப்போது தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
போராட்டம்
இந்த நிலையில், அந்த கிராமத்தில் உள்ள மதுக்கடையில் கலப்படமான மதுபானம் விற்பனை செய்வதாகவும், அதனை குடித்து தான் மஞ்சுநாத் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். பின்னர் மஞ்சுநாத்தின் உடலை அந்த மதுபான கடை முன்பு வைத்து திடீரென்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மதுக்கடையில் கலப்படமான மதுபானம் விற்பனை செய்வதாகவும், இதனால் பலர் இறக்க வாய்ப்பு உள்ளதாகவும், உடனடியாக அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தரிகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மஞ்சுநாத்தின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுபானம் குடித்ததால் மஞ்சுநாத் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் மஞ்சுநாத் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.