மராட்டியம்: உடைந்து விழுந்த சிவாஜி சிலை; எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்


மராட்டியம்:  உடைந்து விழுந்த சிவாஜி சிலை; எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
x

சிவாஜி சிலையின் தரத்தில் மராட்டிய அரசு பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன.

மும்பை,

மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த 35 அடி உயர சிலை இன்று மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சிலை உடைந்ததற்கான சரியான காரணம் பற்றி நிபுணர்கள் உறுதி செய்வர். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கனமழை பெய்தும், பலத்த காற்று வீசியும் வந்தது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிலைக்கு ஏற்பட்ட சேதம் பற்றி ஆய்வு செய்வதற்காக, காவல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, சிலைக்கான தரத்தில் பெரிய அளவில் மராட்டிய அரசு கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.எல்.ஏ. வைபவ் நாயக்கும், சிலையின் தரம் பற்றி அரசை விமர்சித்து உள்ளார். எனினும், இதுபற்றி முழு அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். அதே இடத்தில் புது சிலை அமைப்போம் என மராட்டிய மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.


Next Story