மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து


மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து
x
தினத்தந்தி 3 Oct 2024 11:16 PM IST (Updated: 4 Oct 2024 1:08 PM IST)
t-max-icont-min-icon

மராத்தி, பெங்காலி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2004-ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. பின் 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.

இந்நிலையில் இன்று( அக்.,03) பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . ஏற்கனவே ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன. தற்போது 5 மொழிகள் என செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,

'இதுவரை, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்துள்ளோம். செம்மொழிகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் இந்த மொழிகளின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கை இந்த மொழிகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மதிப்பதோடு மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினரிடையே ஆழமான பாராட்டை வளர்க்க உதவும் என்றும் அவர் கூறினார்.


Next Story