மராட்டிய அரசியல் விவகாரம்; அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் ஏக்நாத் ஷிண்டே உரை


மராட்டிய அரசியல் விவகாரம்; அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் ஏக்நாத் ஷிண்டே உரை
x

மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளான இன்று புறப்படுவதற்கு முன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்.



பனாஜி,



மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஸ் அகாடியின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 20ந்தேதி இரவில், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்று திரண்டு அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் புளூ ரேடிசன் என்ற ஆடம்பர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்களை திரும்ப வரும்படி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் அதன் பலனில்லை.

கூட்டணியில் இருந்து வெளியே வரும்படி ஷிண்டே டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில், உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க. களத்தில் இறங்கியது. அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த கவர்னர் கோஷ்யாரி சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து திரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட கவர்னரை கோரி உள்ளோம். இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம்.

கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி நான் உத்தரவிடவில்லை என கவர்னர் நேற்று முதலில் கூறினார். ஆனால் அதன்பின்னர், மராட்டிய சட்டசபை சபாநாயகர் (இன்று) வியாழ கிழமை அவையை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு கோவாவுக்கு பயணம் மேற்கொண்டனர். கோவாவில், தாஜ் ரிசார்ட்டில் அவர்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

இதன்பின்னர் மும்பை நகருக்கு இன்று புறப்பட்டு செல்லும் அவர்கள் அங்கிருந்தபடியே, மராட்டிய சட்டசபைக்கு நேரடியாக செல்கின்றனர். மக்கள் எங்களுடனேயே உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் என ஷிண்டே அணி தெரிவித்து உள்ளது.

ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறும்போது, மும்பைக்கு இன்று நாங்கள் புறப்படுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே கூட்டம் ஒன்றை நடத்தி உரையாற்றுவார் என தெரிவித்து உள்ளார்.

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள உத்தவ் தாக்கரே எனது சொந்த மக்களே நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என கூறிய தகவல் சாம்னா பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே இருவரும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வார்கள் என மராட்டிய பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். இதனால் மராட்டிய அரசியல் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story