இண்டிகோ நிறுவனத்தின் பல விமானங்கள் தாமதம்- விளக்கம் கோரியது டிஜிசிஏ


இண்டிகோ நிறுவனத்தின் பல விமானங்கள் தாமதம்-  விளக்கம் கோரியது டிஜிசிஏ
x

ஊழியர்கள் (சிப்பந்திகள்) பற்றாக்குறை காரணமாக 45 சதவீத விமானங்களே இன்று இயக்கப்பட்டதாகவும் பல விமானங்கள் தாமதம் ஆனதாகவும் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சக தரவுகள் காட்டுகின்றன.

புதுடெல்லி,

விமான போக்குவரத்து துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுவதும் பரவலாக நேற்று பாதிக்கப்பட்டன. விமானத்தின் ஊழியர்கள் (சிப்பந்திகள்) பற்றாக்குறை காரணமாக 45 சதவீத விமானங்களை மட்டுமே சரியான நேரத்தில் இயக்க முடிந்ததாகவும் பல விமானங்கள் தாமதம் ஆனதாகவும் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சக தரவுகள் காட்டுகின்றன.

அண்மையில் டாடா நிறுவனம் கைப்பற்றிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஆள் சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியாவின் 2 ஆம் கட்ட ஆள்சேர்ப்பு பணி சனிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இண்டிகோ விமானத்திற்கு சொந்தமாக 1600 விமானங்கள் உள்ளன. இந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று தாமதம் அடைந்தன. திடீரென விமான இயக்கத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து இண்டிகோ இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமாக குறைக்கப்பட்டு வருவதால், இண்டிகோ விமான ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.


Next Story