தனி மனிதனின் 5 வருட போராட்டம் வெற்றி; சுமார் 3 லட்சம் பேருக்கு ரூ.35 வீதம் ரூ.2.43 கோடியை திருப்பி அளிக்க ரெயில்வே ஒப்புதல்!


தனி மனிதனின் 5 வருட போராட்டம் வெற்றி; சுமார் 3 லட்சம் பேருக்கு ரூ.35 வீதம் ரூ.2.43 கோடியை திருப்பி அளிக்க ரெயில்வே ஒப்புதல்!
x

ரத்து செய்யப்பட்ட ரெயில்வே டிக்கெட்டுக்காக ரூ.35 மீதி தொகையை திரும்பப் பெறுவதற்காக 5 வருடங்கள் போராடி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டா,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த 30 வயதான பொறியாளர் சுஜீத் சுவாமி என்பவர், ரெயில்வேயில் இருந்து ரூ.35 பணத்தை திரும்பப் பெறுவதற்காக நடத்திய ஐந்தாண்டு காலப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அந்த நபர், ஜூலை 2, 2017 அன்று, அதாவது ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு ஒருநாள் கழித்து, தனது நகரத்திலிருந்து புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்வதற்காக, ஏப்ரல் 2017 இல் 'கோல்டன் டெம்பிள்' ரெயிலில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அவர் ரூ.765 தொகை மதிப்புள்ள அந்த டிக்கெட்டை ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ரத்து செய்ததனால் ரூ.65 கழிக்கப்பட்டு, மீதி தொகை அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ரூ.100 கழிக்கப்பட்டு, ரூ.665 மட்டுமே அவருக்கு ரெயில்வேயால் வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பே அவர் டிக்கெட்டை ரத்து செய்திருந்தாலும், கூடுதல் தொகையான ரூ.35 சேவை வரியாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ஜிஎஸ்டி நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, சேவை வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.35 திரும்பப் பெற அவர் போராடினார்.

அவர் கிட்டத்தட்ட 50 முறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரெயில்வே துறைக்கும், நிதி அமைச்சகத்துக்கும் விண்ணப்பங்களை தாக்கல் செய்தார். அவ்வாறு தனது போராட்டத்தில் நான்கு அரசுத் துறைகளுக்கு கடிதங்களை அனுப்பினார்.

ஐஆர்சிடிசி அவருடைய ஆர்டிஐ கேள்விக்கு அளித்த பதிலில், 2.98 லட்சம் பயனர்கள் ஒவ்வொரு டிக்கெட்டின் மீதும் ரூ.35 வீதம், ஒட்டுமொத்தமாக ரூ.2.43 கோடியைத் திரும்பப் பெறுவார்கள் என்று பதில் அளித்துள்ளது. இதன் காரணமாக, இதே போன்ற 2.98 லட்சம் ஐஆர்சிடிசி பயனர்களுக்கு ரூ.2.43 கோடி பணத்தைத் திருப்பி அளிக்க ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் ரெயில்வேயில் இருந்து ரூ.35 பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஐந்தாண்டு காலப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், ஜிஎஸ்டி நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே, டிக்கெட்டை ரத்து செய்த இதேபோன்ற சூழ்நிலையில் இருந்த கிட்டத்தட்ட 3 லட்சம் மக்களுக்கு அவர் உதவி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:-

"இழந்த பணத்தை திரும்பப் தரக் கோரி, டுவிட்டரில் நான் மீண்டும் மீண்டும் டுவீட் செய்தேன். அதில் பிரதமர், ரெயில்வே மந்திரி, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், நிதி மந்திரி மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகியோரை டேக் செய்து குறிப்பிட்டு டுவீட் செய்தேன். அதன் பயனாக பணம் திரும்ப கிடைத்தது.

எனினும், எனது வங்கிக் கணக்கில் மே 1, 2019 அன்று ரூ. 33ஐப் பெற்றேன், சேவை வரியாக பிடிக்கப்பட்ட ரூ.35-ஐக்கு ரூ.2 கழிக்கப்பட்டது. பாக்கி ரூ.2-ஐ திரும்பப் பெறுவதற்காக, நான் அடுத்த மூன்று வருடங்கள் தொடர்ந்து போராடினேன். இறுதியாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பலன் கிடைத்தது. நான் எனது வங்கிக் கணக்கு விவரத்தை ஐஆர்சிடிசிக்கு அனுப்பி, இன்று ரூ.2-ஐ திருப்பி பெற்றேன்" என்றார்.

மேலும், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, 5 ஆண்டு போராட்டத்தை குறிக்கும் பொருட்டு ரூ.500ம், மீதி தொகையாக கிடைத்த ரூ.35யும் சேர்த்து, மொத்தம் ரூ.535ஐ பிரதமர் நலத்திட்டம் (பி எம் கேர்ஸ்)க்கு சுஜீத் சுவாமி அனுப்பியுள்ளார்.


Next Story