மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை


மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x

மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்டில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் கடந்த மாதம் 30-ந்தேதி நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்குவதற்கான சூழல் தற்போது சரியாக இல்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மணீஷ் சிசோடியா தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்றும் மக்களவை தேர்தல் நடப்பதால் அவரது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள் அமர்வு, சிசோடியாவின் ஜாமின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.


Next Story