டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்...!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியை சிபிஐ கைது செய்தது.
டெல்லி,
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த மாதம் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிபிஐ அதிரடியாக கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 26-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அன்று மாலையே மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிசோடியாவை 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, மணிஷ் சிசோடியா சிபிஐ காவலில் அடைக்கப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், கடந்த 4-ம் தேதி சிசோடியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிசோடியாவை மேலும் 2 நாட்கள் 6-ம் தேதி வரை (இன்று வரை) நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு அனுமதியளித்தது.
இந்நிலையில், மணிஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மதுபான கொள்கை முறைகேடு வழங்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சிசோடியாவின் காவலை நீட்டிக்கும்படி சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு, மணிஷ் சிசோடியாவை மேலும் 14 நாட்கள் (வரும் 20-ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க அனுமதியளித்தது.
அதேவேளை, நீதிமன்ற காவலின்போது மருந்து மாத்திரை, 2 கண் கண்ணாடி, டைரி, பேனா, பகவத்கீதை ஆகியவற்றை வைத்துக்கொள்ள அனுமதிக்கும்படி மணிஷ் சிசோடியா அனுமதிகேட்டார். மணிஷ் சிசோடியாவின் கோரிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அவர் மீண்டும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.