மதுபானக் கொள்கை வழக்கு: போன்களை மாற்றி, ஆதாரங்களை அழித்தார் மணீஷ் சிசோடியா - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு


மதுபானக் கொள்கை வழக்கு: போன்களை மாற்றி, ஆதாரங்களை அழித்தார் மணீஷ் சிசோடியா - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 30 Nov 2022 5:57 PM IST (Updated: 30 Nov 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆதாரங்களை அழித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றார். இது தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அமித் அரோராவை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்தனர். அதன்பின், ரூஸ் அவென்யூ கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அமித் அரோராவை 7 நாள் காவல் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆதாரங்களை அழித்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டி உள்ளது.

மணீஷ் சிசோடியா மற்றும் அமித் அரோரா ஆகியோர் 11 போன்களை மாற்றியுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் நடைபெற்ற போது இந்த போன்களை இவர்கள் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இருவரும் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.


Next Story