மணிப்பூரில் ராணுவ முகாமில் அத்துமீறி நுழந்து ஆயுதங்களை திருட முயன்ற கும்பல்: ஒருவர் சுட்டுக்கொலை


மணிப்பூரில் ராணுவ முகாமில் அத்துமீறி நுழந்து  ஆயுதங்களை திருட முயன்ற கும்பல்: ஒருவர் சுட்டுக்கொலை
x

மணிப்பூரில் பாதுகாப்பு படை முகாமில் நுழைந்து ஆயுதங்களை திருடும் முயற்சியில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். ஆனால், ஆயுதம் வைத்திருந்த அந்த கும்பல் வீரர்களை நோக்கி சுடத்தொடங்கினர். இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் 27 வயது நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

அதேவேளையில் அசாம் ரைபிள் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கும்பல் மற்ற பகுதிகளில் இருந்து வீரர்களை உள்ளே நுழைய முடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். இருந்தாலும் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

அந்த கும்பல் அசாம் ரைபிள் வீரர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனத்தையும் தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பெயர் ரொனால்டோ எனவும், மேலும் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 3-ந்தேதியில் இருந்து இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமலில் தஞ்சம் அடைந்த நிலையில் உள்ளனர்.


Next Story