54 பேரை பலி கொண்ட மணிப்பூர் வன்முறை கட்டுக்குள் வந்தது; ராணுவம் தீவிர ரோந்து


54 பேரை பலி கொண்ட மணிப்பூர் வன்முறை கட்டுக்குள் வந்தது; ராணுவம் தீவிர ரோந்து
x

54 பேரை பலி கொண்ட மணிப்பூரில் வன்முறை கட்டுக்குள் வந்தது. அங்கு ராணுவமும், துணை ராணுவமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

மணிப்பூரில் வன்முறை

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடி இன (எஸ்.டி.) அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

3-ந் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தியபோது, அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் வன்முறை கோரத்தாண்டவமாடியது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் தீயிட்டுக்கொள்ளுத்தப்பட்டன. தமிழர்கள் வாழும் மணிப்பூர்-மியான்மர் எல்லையின் மோரோ கிராமமும் தப்பவில்லை ஊரடங்கு போடப்பட்டது. ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது.

54 பேர் பலி

மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இன்னும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறுகின்றன. பலியானவர்களில் 15 பேரது உடல்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவன ஆஸ்பத்திரியிலும், 23 உடல்கள் லாம்பேலில் இருக்கிற பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவன ஆஸ்பத்திரியிலும் வைக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில 4 போராளிகள் கொல்லப்பட்டனர்.

கட்டுக்குள் வந்தது

இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் முக்கியமான எல்லா இடங்களிலும், சாலைகளிலும் ராணுவமும், அதிரடிப்படையினரும், மத்திய ஆயுதப்படையினரும் தீவிரமான ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பெரும்பாலான கடைகள், சந்தைகள் திறந்துள்ளன. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், காய்கறிகளையும் கடைகளுக்கு வந்து வாங்கிச்சென்றனர்.

வன்முறை கோரத்தாண்டவமாடிய பகுதிகளில் இருந்து 13 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 12 மணி நேரத்தில் இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார். ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறைக்கு பயந்து 1,100 பேர் அசாம் மாநிலத்தின் சச்சார் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மத்திய ஆயுதப்படையினருக்கு உத்தரவு

மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவின் கோப்ரா அணியைச் சேர்ந்த ஒரு கமாண்டோ, சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது மத்திய ஆயுதப்படை போலீசார் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மணிப்பூரில் உள்ள அந்தப் படைப்பிரிவினர் தங்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்துடன் அருகில் உள்ள படைத்தளத்துக்கு செல்லுமாறு மத்திய ஆயுதப்படை போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

'நீட்' தேர்வு ஒத்திவைப்பு

மணிப்பூரில் மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.


Next Story