மணிப்பூர் 8 மாதங்களாக எரிகிறது, பிரதமர் எங்கிருக்கிறார் பாருங்கள்... புகைப்படத்தை பதிவிட்டு காங்கிரஸ் விமர்சனம்
பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் கலையில் பிரதமர் மோடி வல்லவர் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தனது லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதி மெய்சிலிர்க்க வைத்தது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சிந்திக்க இது எனக்கு வாய்ப்பளித்தது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் லட்சத்தீவு பயணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பதிவிட்ட புகைப்படங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"மணிப்பூர் 8 மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள், வீடற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவின் பிரதமர் எங்கே இருக்கிறார்? நீங்களே பாருங்கள்.
இந்திய பிரதமர் கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். வெவ்வேறு உடைகளில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அற்புதமான போஸ் கொடுக்கப்படுகிறது. அவர் கரையில் இளைப்பாறுவதும், கடல் அலைகளுடன் விளையாடுவதும் வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடி, பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் கலையில் வல்லவர்."
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.