மணிப்பூர் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு - 175 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மணிப்பூர் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு - 175 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2023 4:45 AM IST (Updated: 16 Sept 2023 6:24 AM IST)
t-max-icont-min-icon

கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மணிப்பூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூர் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம்வரை இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலவரத்தில் 175 பேர் பலியானதாக போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். கலவரத்தில் ெபண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடந்தன.

இந்நிலையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மணிப்பூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை ஆணையாளர் ரஞ்சித்சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மணிப்பூர் கலவரத்தில் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளான பெண்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை இழப்பீடு வழங்கப்படும். கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம்வரை வழங்கப்படும்.

ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம்வரை அளிக்கப்படும். உயிரிழந்த மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போக செய்யப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை இழப்பீடு அளிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கோ, அவர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுடைய குடும்பத்தினருக்கோ இந்த இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மணிப்பூர் கலவரத்தில் 175 பேர் இறந்ததாக போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. முய்வா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மணிப்பூர் கலவரத்தில் 175 பேர் பலியாகி உள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளனர். 32 பேர் காணாமல் போனார்கள். 4 ஆயிரத்து 786 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

386 வழிபாட்டு தலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகளில், 1,359 துப்பாக்கிகளும், 15 ஆயிரம் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 172 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

பலியான 175 பேரில் 79 பேரின் உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளன. 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை. 9 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

கலவரம் தொடர்பாக 9 ஆயிரத்து 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இயல்புநிலையை திரும்ப செய்ய போலீசாரும், மத்திய படைகளும் பாடுபட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story