மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கேபினட் கூட்டத்திற்கு முதல் மந்திரி அவசர அழைப்பு
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கேபினட் கூட்டத்திற்கு மணிப்பூர் முதல் மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3-ந்தேதி குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியானதும், அவர்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தகவலும் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபோன்ற பரபரப்பு சூழலுக்கு இடையே அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மேற்கு இம்பால் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி, பயங்கரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். மெய்தி இனமக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். குகி குழுவை சேர்ந்த பயங்கரவாதிகள், நவீன தொழில்நுட்ப ஆயுதத்தை கையாளுவது பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், பதிலடி என்கவுண்ட்டர் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அங்கு மீண்டும் டிரோன் குண்டுவீச்சு நடந்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள டிராங்லாவோபி என்ற இடத்தில் நேற்று இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். குகி பயங்கரவாதிகள், ஆளில்லா விமானத்தில் ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை வீசுவதால் அந்த மலையடிவார குடியிருப்பை நாங்கள் காலி செய்து வந்துவிட்டோம். அங்கு யாரும் வசிக்காததால் குண்டுவீச்சால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதேபோல பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் நேற்று மதியம் 2-வது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. முன்னாள் முதல்-மந்திரி மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் விழுந்த இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்றுநடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார், "மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர். இந்தக் கொலைக்கு பின்னர், மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்கார்கள் உட்பட நான்கு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்" என்று தெரிவித்தனர். மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கேபினட் கூட்டத்திற்கு முதல் மந்திரி பைரேன் சிங் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.