ராகுலின் ஒற்றுமை நடைபயணம்: பாதுகாப்புகோரி மம்தாவுக்கு கார்கே கடிதம்


ராகுலின் ஒற்றுமை நடைபயணம்: பாதுகாப்புகோரி மம்தாவுக்கு கார்கே கடிதம்
x

ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் நுழைய உள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.

பா.ஜனதாவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ம் தேதியன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடைபயணமானது மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் நுழைய உள்ளது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய நடைபயணம் மேற்கு வங்காளத்தை அடையவுள்ளநிலையில், பாதுகாப்புகோரி அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "அடுத்த சில நாட்களில் ஒற்றுமை நடைபயணம் மேற்கு வங்காளத்தின் வழியாக செல்கிறது. சில தீயவர்கள் நடைபயணத்திற்கு சிக்கலைத் தூண்டலாம் என்று எனக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தை மோசமாகக் காட்டுவது அல்லது நடைபயணத்தை சீர்குலைப்பது அவர்களது நோக்கமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

பெங்கால் வழியாக நடைபயணம் சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்கும், நடைபயணத்தில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.






Next Story