மகரவிளக்கு பூஜை நிறைவு - சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை அடைப்பு


மகரவிளக்கு பூஜை நிறைவு - சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை அடைப்பு
x

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதற்காக கோவில் நடை நவம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டது.

41 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அதன்பின்பு கோவில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை கடந்த 14-ந் தேதி நடந்தது. இந்த இரண்டு சீசன்களிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் முடிந்ததை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று 6.30 மணியளவில் அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் மட்டும் கோவிலுக்கு சுமார் 45 லட்சம் பக்தர்கள் சாமி தரிசன செய்ததாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

அதனை தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.


Next Story