ஒடிசா துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.220 கோடி போதைப்பொருள் பறிமுதல்


ஒடிசா துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.220 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Dec 2023 11:15 PM IST (Updated: 3 Dec 2023 12:22 PM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு உதவுவதற்காக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு துறைமுகத்துக்கு விரைந்துள்ளது.

எகிப்து நாட்டில் இருந்து இந்தோனேசியா வழியாக ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று வந்திருந்தது. இந்த கப்பலில் வந்த பொருட்களை ராட்சத கிரேன் மூலம் இறக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது 22 பாக்கெட்டுகளில் மர்ம பொருள் இருந்ததை கிரேன் இயக்கும் ஊழியர் கண்டுபிடித்தார். உடனே அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அதிகாரிகள் அந்த பொருளை கைப்பற்றி சோதனையிட்டனர். இதில் அது கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த போதைப்பொருள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கப்பல் ஊழியர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு உதவுவதற்காக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு துறைமுகத்துக்கு விரைந்துள்ளது. கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.220 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த கப்பல் ஒடிசாவில் இருந்து ஸ்டீல் தகடுகளை ஏற்றிக்கொண்டு டென்மார்க் செல்ல இருந்தது. ஆனால் கப்பலில் போதைப்பொருள் சிக்கியதை தொடர்ந்து அந்த கப்பலின் பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

பாரதீப் துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.220 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story