ரத்த குழாயை பேணி பாதுகாப்பது முக்கியமானது- சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
ரத்த குழாயை பேணி பாதுகாப்பது முக்கியமானது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு: ரத்த குழாயை பேணி பாதுகாப்பது முக்கியமானது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மருத்துவ பரிசோதனை
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்தன. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அந்த நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் முகாமிட்டு பயணிகளை கண்காணித்து வருகிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு பரவவில்லை.
போக்குவரத்து போலீசார்
இந்த வைரஸ் உடலில் புகுந்து 3, 4 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தென்படுகின்றன. மருத்துவ பரிசோதனை மூலம் நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் ரத்த குழாய் நோய் தடுப்பு மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த நோய் குறித்து நகர பகுதிகளில் மக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இந்த ரத்த குழாய் பாதிப்பு ஏற்பட்டால் அது வேறு நோய்களை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். போக்குவரத்து போலீசார் பிறரை விட அதிகளவில் நின்று கொண்டு பணியாற்றுகிறார்கள். அதே போல் மருத்துவமனைகளில் நர்சுகள் அதிக நேரம் நின்று வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு ரத்த குழாய் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் கால் பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உடற்பயிற்சி
அதனால் ரத்த குழாயை பேணி பாதுகாப்பது மிக முக்கியமானது. அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதை மறக்க கூடாது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.