மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத்


மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - சஞ்சய் ராவத்
x

கஸ்பா இடைத்தேர்தல் வெற்றி டிரைலர் தான், மகாவிகாஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

200 தொகுதிகளில் வெற்றி

மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் கஸ்பா பேத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகரை சந்தித்தார்.

சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர். அவர்கள் இங்கு வாக்காளர்களை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டனர். கஸ்பா டிரைலர் தான். இன்னும் ஒட்டுமொத்த மராட்டியமும் பாக்கி உள்ளது. மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி. மகாவிகாஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் அதிகமாக தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

குழு தான் திருடர்கள்

நான் சட்டசபை உறுப்பினர்களை மதிக்கிறேன். சட்டசபையில் ஒரு குழுவை தான் திருடர்கள் என நான் கூறினேன். இது எல்லோருக்கும் தெரியும். எல்லா சட்டசபை உறுப்பினர்களையும் திருடன் என அழைப்பவன் நான் அல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கு அரசியல் அமைப்பு, சட்டம் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story