இங்கிலாந்தில் இருந்து தங்கம், ரொக்கம் பரிசு அனுப்புவதாக கூறி மராட்டிய பெண்ணிடம் இருந்து ரூ.1.12 கோடி மோசடி..!
இங்கிலாந்தில் இருந்து தங்கம், ரொக்கம் பரிசு அனுப்புவதாக கூறி மராட்டிய பெண்ணிடம் இருந்து ரூ.1.12 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிபாக்,
இங்கிலாந்தில் இருந்து தங்கம், ரொக்கம் அடங்கிய பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி, மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.12 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிமன்றக் கண்காணிப்பாளரான அந்தப் பெண்ணுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சமூக வலைதளத்தில் ஒரு நபர் அறிமுகமானார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிப்பதாக அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த நபரும் மேலும் சிலரும் அந்த பெண்ணுக்கு போன் செய்து இங்கிலாந்தில் இருந்து தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கிய பரிசுப்பொருள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த பரிசுப்பொருளை பெறுவதற்கு சுங்க வரி செலுத்த வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் இருந்து ரூ.1.12 கோடியை பெற்றுள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணுடனான தகவல் தொடர்பை துண்டித்துள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது மோசடி மற்றும் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.