மராட்டியத்தில் மந்திரிகளின் அதிகாரத்தை துறை செயலாளர்களிடம் ஒப்படைத்த ஷிண்டேவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!


மராட்டியத்தில் மந்திரிகளின் அதிகாரத்தை துறை செயலாளர்களிடம் ஒப்படைத்த ஷிண்டேவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!
x

அரசு நிர்வாகம் பாதிக்கப்படாமல் இருக்க மந்திரிகளின் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் முதல் மந்திரி ஷிண்டே ஒப்படைத்திருக்கிறார்.

மும்பை,

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் மந்திரிகள் யாரும் பதவியேற்கவில்லை.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இவ்வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது டெல்லி சென்றுள்ள மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆசாடி ஹா அம்ரித் மகாத்சவ் தேசிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று நடைபெறும் நிதி அயோக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். மேலும் மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசலாம் என்று கூறப்படுகிறது.

மாநிலத்தில் மந்திரி சபை இல்லாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மந்திரிகள் இல்லாமல் அரசு நிர்வாகம் முடங்கி, எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

தற்போதைய சூழலில், அரசு நிர்வாகம் பாதிக்கப்படாமல் இருக்க மந்திரிகளின் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் முதல்மந்திரி ஷிண்டே ஒப்படைத்திருக்கிறார். அதன்படி, தலைமைச் செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவா, மந்திரிகளின் பகுதியளவு நீதித்துறை அதிகாரங்களை மாநில நிர்வாகத்தில் உள்ள செயலாளர்களிடம் ஒப்படைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, வருவாய், ஊரக வளர்ச்சி, பொது நிர்வாகம், கூட்டுறவு துறை உட்பட சில முக்கிய துறைகளில் அவசர பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முதல் மந்திரி ஷிண்டேவின் இம்முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறுகையில், "மந்திரி சபை இல்லாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் துறைகளின் செயலாளர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாநில மந்திரி சபை விரிவாக்கம் தாமதமாவதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவு மாநிலத்தில் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

டெல்லியில் இருந்து கிரின் சிக்னல் கிடைக்கும் வரை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாது, இந்த விஷயத்தில் இது தான் எளிமையான கணக்கு" என்று விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே கூறுகையில், "அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளால் தலைமை தாங்கப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஆகவே முடிவுகள் அவர்களால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும், துறை செயலாளர்களால் அல்ல" என்றார்.

ஆனால், இதனை முதல்மந்திரி அலுவலகம் மறுத்துள்ளது. முதல்மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பகுதியளவு நீதித்துறை விவகாரங்கள் தவிர, செயலாளர்களுக்கு மந்திரியின் அளவிலான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Next Story